‘விசில்’ சின்னத்திற்கான வெற்றியை உறுதி செய்வதற்காக கட்சித் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், நடிகருமான விஜய் இன்று (02) அழைப்பு விடுத்துள்ளார்.
தனது கட்சியான ‘தூய சக்தி’ மட்டுமே தமிழக அரசியலில் உள்ள ‘தீய மற்றும் ஊழல்’ சக்திகளை தோற்கடிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறுனார்.
முன்னதாக கட்சி வளாகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த விஜய், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து விஜய் தவெகவினர் மத்தியில் பேசியதாவது:
காமராஜர், எம்ஜிஆர், அண்ணா இருந்த இடத்தில் இப்போது இவர்களும் இருக்கிறார்களே என்று தமிழக மக்கள் திமுகவைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.
எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கொந்தளித்தனர். இன்று நம்மைப் பார்த்துக் கொந்தளிக்கின்றனர். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை.
இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது.
அதனால், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.
அதைவிடுத்து 50 வருடங்களுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். ‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.
ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.
இந்த டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால், இந்த தீய சக்தியை பற்றி, ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று திருக்குறள் எழுதியிருப்பார்.
தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது. இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும் – என்றார்.

















