காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.
அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று காலை (04.02.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலை 7.59 மணியளவில் நிகழ்விடத்துக்கு வருகை தந்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் சுதந்திர தினப் பேருரையை நிகழ்த்திய ஆளுநர், சுதந்திர தினம் என்பது வடக்கைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ‘சொற்களை விட செயலே முக்கியம்’ என்ற அடிப்படையில் நம்பிக்கையைத் துரிதமாகக் கட்டியெழுப்பி வருவதாகத் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகள் எவ்வித அரசியல் நிபந்தனையுமின்றி உரிமையாளர்களிடம் விடுவிக்கப்படுவது நல்லாட்சிக்கான சிறந்த சான்றாகும் எனவும், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரனர்த்தத்தின் போது வடக்கு மாகாண சபைக்குப் போதிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவித்திருந்ததாலும் நாம் தனித்து விடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘கடந்த காலங்களில் எமது மாகாணத்துக்கு வந்த பல நல்ல அபிவிருத்தித் திட்டங்களை, அவை மத்திய அரசாங்கத்திடமிருந்து வருகின்றன என்பதற்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ நாம் எதிர்த்திருக்கின்றோம்.
அல்லது சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்கின்றோம். ‘எதிர்ப்பதுதான் அரசியல்’ என்ற ஒரு பழமைவாத அரசியல் கலாசாரம் இங்கு வேரூன்றியிருப்பதை நாம் மறுக்க முடியாது.
ஆனால், இந்த மனப்பாங்கு எமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அபிவிருத்தித் திட்டங்கள் வரும்போது, அவற்றை அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்காமல், ‘இதனால் எமது மக்களுக்கு என்ன நன்மை?’, ‘எமது இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும்?’ என்ற வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இன்னும் பழைய கோசங்களை வைத்துக்கொண்டு, வரும் வாய்ப்புகளைத் தட்டிக்கழித்தால், எமது அடுத்த சந்ததி தொழில் தேடி வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை மாறாது. எனவே, மக்களின் நன்மை கருதி வரும் திட்டங்களை அரவணைத்து, அவற்றை வெற்றிபெறச் செய்வதே விவேகமான அரசியலாகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேவை, ஆனால் கண்மூடித்தனமான எதிர்ப்புகள் எமது வளர்ச்சியை நாமே தடுப்பதற்குச் சமமாகும்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும் இன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’, ஊழலற்ற நிர்வாகத்துக்கான ‘டிஜிட்டல் மயமாக்கல்’, வறுமைச் சுட்டியை குறைப்பதற்கான ‘வறுமை ஒழிப்பு’, இளைஞர்களைப் பாதுகாக்கும் ‘போதை ஒழிப்பு’ மற்றும் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ‘பிரஜா சக்தி’ ஆகிய தேசியத் திட்டங்களில் வடக்கின் பங்களிப்பு அவசியமானது எனவும், இவற்றை நாம் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காது எமது மக்களின் நலன்கருதிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வடக்கில் மூன்று புதிய முதலீட்டு வலயங்கள் உருவாகவுள்ளதாகவும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் சீமெந்துத் தொழிற்சாலை போன்றவை புத்துயிர் பெறவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வளமான வடக்கு என்பது வெகுவிரைவில் நனவாகப் போகும் யதார்த்தம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை, தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.
ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பாண்ட் வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதம செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

















