லாகூரில் மூத்த ஐ.சி.சி அதிகாரிகளுடன் நடைபெற்ற மாரத்தான் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியைப் புறக்கணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்த தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெளிவுபடுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கிண்ண குழு நிலைப் போட்டி நெருங்கி வரும் நிலையில், இந்தப் பிரச்சினை உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விவாதங்களில், PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் குவாஜா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டி:20 உலகக் கிண்ணத்தின் மிக முக்கியமான போட்டி நிச்சயமற்ற நிலையில் உள்ள சூழ்நிலையைத் தவிர்க்க ஐசிசி ஆர்வமாக இருப்பதால் இந்த கூட்டம் இடம்பெற்றது.
அறிக்கைகளின்படி, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு PCB இப்போது பாகிஸ்தான் கூட்டாட்சி அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டின் அதிகம் பார்க்கப்படும் போட்டியிலிருந்து விலகுவதால் ஏற்படும் அரசியல் திசை மற்றும் பரந்த விளைவுகள் இரண்டையும் வாரியம் எடைபோடுவதால், அடுத்த 24 மணிநேரம் தீர்க்கமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.


















