இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.
குறித்த தினத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவாக, இந்தியாவுடனான லீக் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றுக்கு இடையே உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) வழங்கிய விளக்கங்கள் மற்றும் பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றுப் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று மாலை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த இலங்கை ஜனாதிபதி, இந்தச் சிக்கலுக்கு சுமுகத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல், பங்காதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் அமினுல் இஸ்லாம் விடுத்த நெகிழ்ச்சியான கோரிக்கையையும் பாகிஸ்தான் அரசு கனிவுடன் பரிசீலித்தது.
இந்தநிலையில், “பன்முகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, எதிர்வரும் 15 ஆம் திகதி திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு உத்தரவிடப்படுகிறது என பாகிஸ்தான் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைப் பாதுகாக்கவும், அதன் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன், “மென் இன் கிரீன்” (Men in Green) என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணிக்கும் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த விளையாட்டு உணர்வுடனும், தேசப் பெருமையுடனும் களமிறங்கி உலக அரங்கில் வெற்றி பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.















