(Bristol) பிரிஸ்டலில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலையில் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த நேதன் பென்னட் (Nathan Bennett) என்பவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேதன் பென்னட் (Nathan Bennett) மீது சுமத்தப்பட்ட இரண்டு பாலியல் துஸ்பிரயோக வழக்குகள், நான்கு பாலியல் அத்துமீறல் வழக்குகள் மற்றும் இரண்டு ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்திய வழக்குகள் என அனைத்திலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பிரிஸ்டலில் உள்ள பார்டோ கிங் ஸ்ட்ரீட் சிறுவர் பாடசாலையில் (Partou King Street Nursery) இருந்த ஐந்து சிறுவர்கள் பாதிக்கப்பட்டதுடன் இந்தச் சம்பவங்கள் நடந்தபோது அந்த குழந்தைகளுக்கு இரண்டு மற்றும் மூன்று வயதே ஆகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னதாக, நான்கு சிறுவர்கள் தொடர்பான 13 இதர பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாத் (Bath) அருகே உள்ள (Corston) கோர்ஸ்டனைச் சேர்ந்த 30 வயதான பென்னட், (Avon ) அவான் மற்றும் (Somerset) சோமர்செட் காவல்துறையின் ஆறு மாத கால விசாரணைக்குப் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணியில் சேர்ந்த பென்னட் மீது, 2025 பெப்ரவரி மாதம் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பாடசாலையின் மேலாளர் சிசிடிவி (CCTV) காட்சிகளில் பென்னட் ஒரு குழந்தையிடம் அநாகரிகமாக நடந்துகொண்டமையினை அவதானித்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து குறித்த சிறுவர் பாடசாலை 2025 டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
இதேவேளை, சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட நேதன் பென்னட் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மிக நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி வழங்கப்படும். என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாதிக்கப்படாத ஏனைய குழந்தைகளின் பெற்றோர்களும் இந்தச் சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் “இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு எப்படி நடந்தது? அந்தப் பள்ளியின் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் தோல்வியடைந்தன?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இது குறித்த தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர், அவான் மற்றும் சோமர்செட் காவல்துறையின் இணையதளத்தில் உள்ள பிரத்யேக படிவத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













