திங்களன்று அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் சில ஆடைகள் மற்றும் ஜவுளிகளுக்கு பங்களாதேஷ் விலக்குகளைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டாக்கா தனது சந்தைகளை பரந்த அளவிலான அமெரிக்கப் பொருட்களுக்குத் திறப்பதற்கு ஈடாக, வொஷிங்டன் பங்களாதேஷின் மீதான அதன் வரிகளை 20% இலிருந்து 19% ஆகக் குறைக்கும்.
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான பங்களாதேஷின் முதுகெலும்பாக ஆடைத் தொழில் உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வர்த்தக பங்காளிகள் மீது கடுமையான வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, தெற்காசிய நாடு வெள்ளை மாளிகையுடன் நீண்டகால பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் ஒவ்வொரு சந்தைக்கும் “முன்னோடியில்லாத அணுகலை” வழங்கும் என்றும் வெள்ளை மாளிகை இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பங்களாதேஷ் மீதான அதன் வரி விகிதத்தைக் குறைக்கும் என்றும், நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் வரிகள் இல்லாமல் நுழைய சில ஆடை மற்றும் ஜவுளிப் பொருட்களை அடையாளம் காணும் என்றும் அது கூறியது.
அமெரிக்க பருத்தி மற்றும் செயற்கை ஜவுளிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் அளவு, அமெரிக்கா பங்களாதேஷுக்கு எவ்வளவு ஜவுளிகளை ஏற்றுமதி செய்கிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை ஆடைத் துறை கொண்டுள்ளது மற்றும் சுமார் நான்கு மில்லியன் தொழிலாளர்களைப் பணியமர்த்துகிறது.
இதற்கு ஈடாக, அமெரிக்க விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களுக்கு “குறிப்பிடத்தக்க முன்னுரிமை சந்தை அணுகலை” வழங்க பங்களாதேஷும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதில் அமெரிக்க இரசாயனங்கள், மருத்துவ சாதனங்கள், கார் பாகங்கள், சோயா பொருட்கள் மற்றும் இறைச்சிக்கு அதன் சந்தைகளைத் திறப்பது அடங்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.














