பங்களாதேஷில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. அங்கு ஏற்பட்ட மாணவர்கள் வன்முறையால் அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
தற்போதைய தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பிரதான கட்சியான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றும் ஜமாத் – இ – இஸ்லாமி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்த கூட்டணியில் மாணவர்கள் அமைப்புகள் உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) இடம் பெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பிஎன்பி கூட்டணி, ஜமாத் – இ – இஸ்லாமி கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இவை தவிர 10 கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன.ஜாதியா கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன. ஆட்சியமைக்க 151 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பிஎன்பி கூட்டணி 150-க்கு மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நேற்று மாலை 4.30 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நள்ளிரவு நிலவரப்படி பல்வேறு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பிஎன்பி கட்சி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 10 மணி அளவில் முழுமையான முடிவுகள் தெரியவரும். பிஎன்பி வெற்றி பெற்றால் ,அதன் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.















