லண்டனில் திங்களன்று இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, சிரியாவின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்துப் பிரதமருடனான இந்த சந்திப்பின் போது, சிரியாவில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஜோர்னின் ஆதரவை அப்துல்லா எடுத்துரைத்ததாக ஜோர்தானின் அரசு செய்தி நிறுவனமான பெட்ரா (Petra) கூறியுள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்திற்கும், அந்தப் பிரதேசத்தின் மீது கட்டுப்பாட்டை திணிக்க முயற்சிப்பதற்கும் ஜோர்தானின் எதிர்ப்பை மீண்டும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.
மேலும், காசா விடயத்தில் மன்னர் அப்துல்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பொதுமக்களின் இன்னல்களைக் குறைக்க, அந்தப் பகுதி முழுவதும் மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சந்திப்பின் போது இங்கிலாந்துப் பிரதமர், பிராந்திய ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதில் பிரிட்டனுக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த லண்டன் உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.
தனது லண்டன் பயணத்தின் போது, அப்துல்லா முன்னாள் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, சிரியா, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் மற்றும் காசா உள்ளிட்ட பிராந்திய முன்னேற்றங்களைப் பற்றியும் விவாதித்துள்ளார்.













