பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 25 உறைகளில் அடைக்கப்பட்ட 992 கிலோ 800 கிராம் எடையுள்ள பீடி இலைகள், 1,40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் என்பவற்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கிப் படகு என்பன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் (2 கோடி) அதிகம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற விசேட தகவல் ஒன்றுக்கமைய நேற்றையதினம் (21) கடற்படையினருடன் இணைந்து ஸ்ரீலங்கா கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், விவசாய இரசாயனப் பொருட்கள், டிங்கிப் படகு என்பன மேலதிக விசாரணைகள் மற்றும் முன்வைக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













