பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), ஜப்பான் ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டமாக, பேலியகொடவில் உள்ள ‘ரிவர்பொயிண்ட்’ (Riverpoint) தலைமையகத்தில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” (Entsuji Room”) என்ற பிரத்யேக இடத்தை அமைத்துள்ளது.
டோக்கியோ அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படும் மற்றும் யோஹெய் சசகாவாவின் (H.E. Yohei Sasakawa) தலைமையிலான நிப்பான் அறக்கட்டளையினால் நிதியளிக்கப்படும் “READ JAPAN” திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட ஜப்பான் தொடர்பான முக்கியமான புத்தகங்களின் தொகுப்பு இந்த எண்ட்சுஜி அறையில் வைக்கப்படும்.
கடந்த 18 ஆம்திகதி ரிவர்பொயிண்டில் உள்ள பாத்ஃபைண்டர் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமதா (H.E. Akio Isomata) அவர்களால் இந்த புத்தகத் தொகுப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இதனை பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட பெற்றுக்கொண்டார்.
இந்த எண்ட்சுஜி அறையின் ஸ்தாபிப்பானது, இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான அறிவுசார் மற்றும் கலாசார ரீதியான பிணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.















