திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர், நேற்று பகல் நால்வரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று பகல் வேளையில் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த கொரியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கா QR குறியீட்டை சமர்ப்பிக்காமல் எரிபொருள் கேட்டுள்ளார். விதிமுறைகளின்படி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க மறுத்த நிலைய ஊழியரின் கழுத்தைப் பிடித்து அவர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்ற அந்த நபர், சிறிது நேரத்தில் மேலும் மூவருடன் இணைந்து மீண்டும் எரிபொருள் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியரை விரட்டி விரட்டி அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது அங்கிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த எரிபொருள் நிலைய ஊழியர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த திருகோணமலை பொலிசார், உடனடியாகக் களத்தில் இறங்கி விசாரணைகளை மேற்கொண்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















