யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யால தேசிய பூங்காவின் கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்புச் சாவடிக்கு அருகில் இன்று (21) காலை திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்புச் சாவடியில் கடமையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சத்தம் கேட்டவுடன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதிகாரிகளின் வருகையை அவதானித்த சந்தேகநபர்கள், அவர்கள் வந்த காரிலேயே ஏறி அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதிஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
தப்பியோடிய கார் மற்றும் அதில் வந்த சந்தேகநபர்களைக் கண்டறிய கிரிந்த பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்த விபரங்கள் வழங்கப்பட்டு வீதித் தடைகள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.













