ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqch) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மெஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரை இலக்கு வைக்க வேண்டாம் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இஸ்ரேல் அவர்களைத் தனது தாக்குதல் பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சாத்தியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் ஆராய்ந்து வரும் நிலையில் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியலிலிருந்து இரண்டு உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திச் சேவையான ‘The Wall Street Journal‘ முதலில் செய்தி வெளியிட்டது.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்தியில், குறித்த இரு அதிகாரிகளும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இதில் பாகிஸ்தானின் பங்கு எதையும் செய்திச் சேவை குறிப்பிடவில்லை.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர, தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பிற நாடுகளுக்கு நேரடித் தொடர்புகள் முடக்கப்பட்டிருக்கும் வேளையில், இஸ்லாமாபாத் வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் நேரடித் தொடர்பைப் பேணி வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் வழியாக அனுப்பிய 15 அம்சத் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருகின்றது.
போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தெஹ்ரான் அமெரிக்காவின் முன்மொழிவை பரிசீலித்து வருவதாகவும், ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணம் இல்லை என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















