அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.
ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.















