நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவடைதல் மற்றும் உப்பகற்றப்படுதல் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தாகம் ஏற்படாவிட்டாலும் அடிக்கடி போதியளவு நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதிக கடினமான வேலைகளைத் தவிர்க்கவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மென்மையான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணியவும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.















