மீத்தோட்டமுல்லை, நிலம் தொடர்பாக ஒரு தொழிலதிபரிடம் பணம் கோரியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 25 மில்லியன் ரூபா அபராதம் செலுத்தவும், தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
இதன்போது, அபராதம் மற்றும் இழப்பீட்டைச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டால், தனது கட்சிக்காரர் மேல்முறையீட்டைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மீத்தோட்டமுல்லை பகுதியில் ஒரு நிலத்தை மேம்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு ஈடாக, தொழிலதிபர் எஸ். கிறிஸ்டியன் கிஹான் மெண்டிஸிடமிருந்து பிரசன்ன ரணதுங்க 64 மில்லியன் ரூபாய் கேட்டதாக 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்தத் தொழிலதிபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து 15 மில்லியன் ரூபாய் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது.
2022 ஜூன் மாதத்தில், கொழும்பு மேல் நீதிமன்றம் பிரசண்ண ரணதுங்கவை குறித்த வழக்கில் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 25 மில்லியன் ரூபா அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட தொழிலதிபருக்கு 1 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து பிரசன்ன ரணதுங்க, தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
தற்போது அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்த விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெற அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.












