இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக ஒரு புதிய தேசிய ஜனநாயகப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காவல் படைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்களுக்கு எதிரான ஜனநாயக விரோதக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பதற்குப் படைகளுக்கு உதவும் புதிய நடவடிக்கையினை வழிநடத்தும் பொறுப்பு காவல்துறைத் தலைவர் கிறிஸ் பால்மரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனது பதவியில், பால்மர் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத் தகவல்களை ஒருங்கிணைப்பதுடன், ஜனநாயக விரோதக் குற்றங்களை வகைப்படுத்துவது தொடர்பில் காவல்துறைப் படைகளுக்கு ஆலோசனை வழங்குவார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு சிறப்பு ஆதரவை வழங்குவார்.
இங்கிலாந்தில் எம்.பி.க்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்வடைந்து கடந்த ஆண்டு சுமார் ஆயிரத்தை எட்டியுள்ளன.
துன்புறுத்தல், குற்றவியல் சேதம் மற்றும் கொலை மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகளே இந்த திடீர் அதிகரிப்பிற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
2019 மற்றும் 2025-க்கு இடையில் எம்.பி.க்கள், பெருநகர காவல்துறையின் நாடாளுமன்றத் தொடர்பு குழுவிடம் 4,064 குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.















