ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று இங்கிலாந்து நடத்திய காணொளிக் கூட்டத்தில் வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கடல் மார்க்கங்களினூடான கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சர்வதேச நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவத்தை விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் இந்த நெருக்கடியின் தாக்கத்தையும், வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே என்ற உண்மையையும் அவர் வலியுறுத்தினார் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் யெவெட் கூப்பர் தலைமையில் நடைபெற்ற இந்தக் காணொளிக் கூட்டத்தில் வொஷிங்டன் கலந்துகொள்ளவில்லை.













