மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் நேற்றைய (02) தினம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை கடுமையாக உயர்த்தியது.
இது ஒரு மாதத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் எரிபொருளுக்கான விலையை பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்த சந்தர்ப்பமாகும்.
அதன்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை 54.9 சதவீதம் உயர்ந்து 520.35 பாகிஸ்தான் ரூபாவாகவும், ($1.88), ஒரு லீட்டர் பெற்றால் விலை 42.7 சதவீதம் உயர்ந்து 458.40 பாகிஸ்தான் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த விலை உயர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.
சர்வதேச மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பாகிஸ்தானின் பெற்றோலியத் துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் கூறினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் காட்டி, கடந்த மாதம் பாகிஸ்தான் ஏற்கனவே டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை சுமார் 20% உயர்த்தியிருந்தது.
இந்த அண்மைய விலை உயர்வானது, பணவீக்கத்தை மேலும் உயர்த்தி, நாட்டின் வறிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.














