டேவ் (Dave) புயலால் பலத்த காற்று வீசும் என்ற வானிலை முன்னெச்சரிக்கை இருந்தபோதிலும், ஈஸ்டர் வார இறுதி தொடங்கும் வேளையில் மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஆயத்தமாகியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், இந்த ஆண்டில் சாலைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று வாகனச் சேவை நிறுவனமான RAC கணித்துள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பின்னர் ஈஸ்டர் வார இறுதியை நெருங்கும் இந் நிலையில், 21.7 மில்லியன் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் வாகன சேவை அமைப்பான AAவின் 13,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட சுமார் 50 லட்சம் அதிகம் என்பதுடன் ஈஸ்டர் சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.03 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஈஸ்டர் ஞாயிறு மற்றும் வங்கி விடுமுறை நாளான திங்கட்கிழமைகளிலும் சாலைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஈரான் போரைத் தொடர்ந்து எரிபொருள் விலையில் ஏற்பட்ட வரலாறு காணாத உயர்வால் பயணிகள் எரிபொருளை நிரப்புவதற்கான செலவு அதிகரித்துள்ளது.
மோதல் வெடித்ததிலிருந்து பெற்றோலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 22 பென்ஸ் உயர்ந்து, சராசரியாக 154.45 பென்ஸாக உள்ளது.
அதேநேரம், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 43 பென்ஸ் உயர்ந்து, சராசரியாக 185.23 பென்ஸாக உள்ளது.
இதேவேளை, டேவ் புயலால் வாகன சாரதிகளும் மோசமான வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு வேல்ஸ், வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மிக பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.












