பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதங்களை அடித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.
இதன்மூலம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றிரவு (16) தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்தது.
நேற்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்தது.
இன்னிங்ஸில் குயின்டன் டி கொக் 60 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக நமன் தீர் 31 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பின்னர், 196 ஓட்டங்களை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, பிரியான்ஷ் ஆர்யா (15) மற்றும் கூப்பர் கொன்னோலி (17) ஆகியோரை ஆரம்பத்திலேயே இழந்தது.
ஏ.எம். கசன்ஃபர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதற்கு ஒரு சிறிய வாய்ப்பை வழங்கினார்.
அதன்பிறகு பிரப்சிம்ரனும் ஐயரும் பொறுப்பேற்று, இலக்கை விரட்டும் முயற்சியில் முழுமையாகத் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர்.
பிரப்சிம்ரன் 39 பந்துகளில் 80 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், அதே நேரத்தில் ஐயர் 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்திருந்த இருவரும், தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
பிரப்சிம்ரன் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிரடியாக ஆடி, வெறும் 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.
ஜஸ்பிரித் பும்ரா ஒரு கேட்சைத் தவறவிட்டபோது, அவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு நம்பிக்கை பிறந்தது.
அவருக்கு நன்கு தோள் கொடுத்து ஆடிய அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மும்பை இந்தியன்ஸின் களத்தடுப்பு அவர்களைப் பெரிதும் கைவிட்டது,
ஆட்டத்தில் மூன்று பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டன.
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை கடந்தது.
பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 80 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துளில் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி ஒன்பது புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்ததுடன், ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, புள்ளி அட்டவணையில் ஒன்பதாவது இடத்திலேயே தொடர்ந்தது.













