இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் கையிருப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த படகிலிருந்து சுமார் 150 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர குறிப்பிட்டார்.
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்தப் படகு நேற்று (16) தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததுடன், நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (17) காலை குறித்த படகுடன் கைதான சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















