கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய இளைஞர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இந்த சிகரெட் தொகையைக் கம்போடியாவில் கொள்வனவு செய்து, அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட இந்த சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்து, சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் சிக்கியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளைப் பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அதனுள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட 53,200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் வரும் ஜூலை 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.












