தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமயானத்தில் நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை இலக்கு வைத்துச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளிலேயே சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டமைக்கான காரணம் அல்லது பின்னணி என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு விபரமும் வௌியாகவில்லை.
இக்கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி தொடர்பாகத் தெஹிவளைப் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய வலைவீசித் தேடி வருகின்றனர்.












