நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக அஹமதாபாத்தில் நேற்றிரவு (20) ஒரு வெற்றியைப் பதிவு செய்தது.
திங்களன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி, இந்த சீசனில் எந்தவொரு அணியும் பெற்றிராத மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தைப் பதிவு செய்துள்ளது.
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை எடுத்தது.
பவர்பிளேயில் 48 ஓட்டங்களை எடுத்த மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி கொக் (13), அறிமுக வீரர் டேனிஷ் மாலேவர் (2) மற்றும் நமன் திர் (45) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
எனினும், ஐந்தாவது இடத்தில் துடுப்பாட்டம் செய்த திலக் வர்மா, 45 பந்துகளில் 101 ஓட்டங்களை எடுத்து அபாரமான சதமடித்து, மும்பை அணியை 199 ஓட்டங்கள் என்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினார்.
அவரது ஆட்டத்தில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி, 15.5 ஓவர்களில் வெறும் 100 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் அஸ்வனி குமார் நான்கு விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தெரிவானார்.
இந்த வெற்றியுடன் மும்பை அணியானது புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியது.















