ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி வருகிறது என்று பன்னாட்டு ஆற்றல் முகாமையின் (IEA) தலைவர் செவ்வாயன்று (21) தெரிவித்தார்.
இது குறித்து பிரான்ஸ் இன்டர் வானொலிச் செய்திச் சேவைக்கு பன்னாட்டு ஆற்றல் முகாமையின் தலைவர் பீரோல் அளித்த செவ்வியில்,
இது உண்மையிலேயே வரலாற்றிலேயே மிகப்பெரிய நெருக்கடி.
ரஷ்யாவுடனான பெட்ரோல் மற்றும் எரிவாயு நெருக்கடியின் விளைவுகளையும் சேர்த்தால், இந்த நெருக்கடி ஏற்கனவே மிகப் பெரியது – என்றார்.
மத்திய கிழக்கில் நடக்கும் போர், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு ஓட்டப்பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவரத்தை முடக்கியுள்ளது.
மேலும், இது ஏற்கனவே ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகத்தைத் துண்டித்திருந்த, உக்ரேனுடனான ரஷ்யாவின் போரின் விளைவுகளுக்கு மேலாக வந்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் தற்போதைய நிலைமை, 1973, 1979 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட முந்தைய நெருக்கடிகளின் கூட்டுத்தொகையை விட மோசமானது என்று தாம் கருதுவதாக பைரோல் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார்.
மார்ச் மாதத்தில், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வைச் சமாளிப்பதற்காக, மூலோபாய கையிருப்புகளில் இருந்து சாதனை அளவாக 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட பன்னாட்டு ஆற்றல் முகாமை (IEA) ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.













