பிரித்தானியாவின் மேர்சிசைட் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் , ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதற்காகத் தனது பதவியைப் பறிமாற்றம் செய்யப்போவதாக வெளிவரும் தகவல்களை முற்றாக நிராகரித்துள்ளார்.
மான்செஸ்டர் நகர மேயர் ஆண்டி பர்ன்ஹாம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி, பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு சவால் விடுக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அதற்காகத் தான் பதவி விலகப் போவதாக வெளிவரும் செய்திகளை பூட்லே (Bootle) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் மறுத்துள்ளார்.
தொழிற்கட்சியின் (Labour) தலைமைத்துவத்திற்குப் போட்டியிடக்கூடும் எனக் கருதப்படும் ஆண்டி பர்ன்ஹாம், தற்போது மான்செஸ்டர் மேயராக உள்ளார்.
அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டுமானால், யாராவது ஒரு மூத்த உறுப்பினர் பதவி விலகி அவருக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இதற்காகப் பாதுகாப்பான தொகுதியான பூட்லே மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட்டின் பெயர் அடிபட்டது.
இந்நிலையில் ஏற்கனவே, செயின்ட் ஹெலன்ஸ் சவுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேரி ரிம்மர் (Marie Rimmer), பர்ன்ஹாமிற்காகப் பதவி விலகும்படி வற்புறுத்தப்படுவதாக வெளியான செய்திகளும் “வெறும் கற்பனை” என பர்ன்ஹாம் தரப்பால் மறுக்கப்பட்டுள்ளது.













