ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கழமை (06) இரவு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம், மேலும் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது – என்றார்.
புதன்கிழமை பிற்பகுதியில், குடியரசுக் கட்சி ஆளுநர் வேட்பாளர் ஒருவருக்கான காணொளிக் கூட்டத்தின்போது ட்ரம்ப், ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்றும் உறுதியளித்தார்.
அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
இந்த நிலையில், அமெரிக்கா முன்வைத்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், தெஹ்ரான் தனது கருத்துக்களை இறுதி செய்த பின்னர் மத்தியஸ்தரான பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
















