இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை இ உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர் இன்று சிறைக்கம்பிகளின் பின்னால் உள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குவியம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இலங்கை தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. அதில் விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் உங்களுடன் ஒருவராக போட்டியாளராக இருக்க வேண்டியவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் வலிகளை, உணர்வுகளை இசைப்பாடல்கள் ஊடாக வெளிக்கொணர வேண்டும் என ஆவாவுடன் இருந்த ஒரு இளைஞன் இன்று சிறை கதவுகளின் பின்னால்இ சிறையில் வாடுகின்றார்.
பயங்கரவாத தடை சட்டம் ஒரு பயங்கரமான சட்டம். உலகின் மனசாட்சியையே உலுக்கும் சட்டம். அந்த சட்டத்தின் கீழ் உங்களின் சக கலைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாடல்களை பாடுவது பயங்கரவாதம் இல்லை. நாம் பேசுகின்றன வெளிப்படுத்துகின்ற விடயங்கள் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்துமாக இருந்தால் அது குற்றம்.
இந்த நாட்டிலே எது பயங்கரவாதம் என்பதனை பொலிஸார் தான் தீர்மானிக்கும் நிலைமை காணப்படுகிறது. இந்த வரி இ இந்த வார்த்தை இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்துகிறது. என்பதனை பொலிஸார் தீர்மானித்து கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்.
இந்த பயங்கரவாத தடை சட்டம் நீதிமன்றங்களையும் கட்டி வைத்துள்ளன பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒருவரை பொலிஸார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினால் இ அவரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை
கருத்தை வெளியிட்ட ஊடகவியலாளர் திசநாயக்கவிற்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தியதா ? வன்முறையை தூண்டியதா ? என்ற கேள்வி எல்லாம் இல்லை. இந்த கருத்து அவற்றை தூண்டலாம் என்ற எண்ணப்பாடு இருந்தாலே ஐந்து வருடங்களுக்கு குறையாத , 20 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
இவ்வாறான பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவோம் என்றே ஜேவிபி யினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அவர்களும் இந்த சட்டத்தினை நீக்கவில்லை. பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டதே ஜேவிபி யினரை அடக்கவே. அந்த சட்டத்தினால் அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள். ஆகையால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும்.
சாதாரண சட்டத்தின் கீழ் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை தற்போது எடுக்கப்படுகிறது.
உங்களை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் இதனை கூறவில்லை. படைப்பாளிகளாக இருக்கும் நீங்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
படைப்புக்கான சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டால் உங்களோடு தோளோடு தோளாக சட்டத்தரணியாக நிற்பேன் என தெரிவித்தார்.













