கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை மற்றும் போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் (Chandipur) அமைந்துள்ள ஏவுகணை சோதனை தளத்தில் இருந்தே இந்த அதிநவீன ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப்பட்டுள்ளன.
உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் கைவசம் உள்ளன.
இந்த வகை ஏவுகணைகள் ஏவப்பட்டவுடன், பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி விண்வெளிக்கு வெளியே செல்லும்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்திற்குள் மிக அதிவேகமாக நுழைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை.
பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே சென்று அதிவேகமாகத் திரும்பி வரும் இத்தகைய ஆபத்தான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் துல்லியமாகக் கணித்து, இடைமறித்து அழிப்பது என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நான்கு வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இத்தகைய ஐசிபிஎம் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் இருந்தன.
தற்போது ஒடிசாவில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பிஎம்டி ஏவுகணை சோதனை மூலம், இந்த விசேட தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் 5ஆவது நாடாக இந்தியா இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த புதிய பாதுகாப்புத் திறன் மூலம், இந்தியாவின் வான்பரப்பு மற்றும் எல்லைகளுக்கு ஏவுகணைகள் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












