2025 மே மாதத்தில் பெறப்பட்ட 641.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பிய பணவரவுகளாக 847 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.
இது 32% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
2025 டிசம்பரல் பெறப்பட்ட சாதனை அளவான 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பிறகு, 2026 மே மாதத்தில் பெறப்பட்ட இந்தத் தொகை, நாட்டின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த மாதாந்திரப் பணப் பரிமாற்றமாகும்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இலங்கை 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வருவாயைப் பெற்றது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 3.10 பில்லியன் அமெரிக்க டொலரை விட 26% அதிகமாகும்.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்துதான் அதிகபட்ச பணப் பரிமாற்றங்கள் வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் 100,686 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டனர்.
அவர்களில், 21,977 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றனர்.
இதன்மூலம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முதன்மை இடமாக அது திகழ்கிறது.
வெளிநாடுகளுடனான தொழிலாளர் ஒப்பந்தங்கள், திறன் பயிற்சி ஆதரவுடன் கூடிய புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல், மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிதிக் கடன் திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னெடுப்புகள், அதிகமான இலங்கையர்களை வெளிநாடுகளில் வேலை தேட ஊக்குவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
















