லங்கா சால்ட் (உப்பு) லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளரான ரத்நாயக்க முதலியன்சலாகே குணரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான அரசாங்க கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே 43 இலட்சம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை லங்கா சால்ட் நிறுவனத்திற்கு உப்புப் பொதியிடும் உறைகளைக் கொள்முதல் செய்யும் போது, முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளரை மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கையூட்டல் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














