பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக புதிய பாதுகாப்பான சட்டபூர்வமான வழிகளை (Safe Routes) திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலையுதிர் காலம் (Autumn) முதல் இந்த புதிய நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அவர், நாட்டின் புகலிட அமைப்பை “வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும்” நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் அகதி கொள்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் இளநிலை அமைச்சர் ஒருவருடனான சர்ச்சைக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய பாதுகாப்பான வழிகள் மூலம், ஆபத்தான சட்டவிரோத பயணங்களைத் தவிர்த்து, தகுதியுடைய அகதிகள் சட்டபூர்வமாக பிரித்தானியாவை அடையும் வாய்ப்பை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகலிட அமைப்பில் நிலவும் அழுத்தங்களை குறைப்பதற்கும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தொடர்பான கொள்கைகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த புதிய திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதேவேளை, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதுடன், உண்மையான பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு உதவும் சமநிலையான அணுகுமுறை அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.



















