பிரித்தானியாவின் அடிமை முறை காலத்திலான அநீதிகளுக்கு இழப்பீடு கோரும் தனது நீண்டகாலப் போராட்டத்தை, ஜமைக்கா (Jamaica) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இதற்காக, வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி ஜமைக்கா அரசாங்கப் பிரதிநிதிகள் பிரித்தானியா சென்று, மன்னர் சார்ள்ஸிடம் முறையான மனுவொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த மனுவில், ஆப்பிரிக்க மக்களைக் கட்டாயப்படுத்தி ஜமைக்காவுக்குக் கொண்டுவந்ததும், அவர்களை அடிமைப்படுத்தியதும் சட்டப்படி சரியானதா என்பது குறித்து லண்டனில் உள்ள ‘பிரிவி கவுன்சில்’ (Privy Council) மூலம் சட்ட ஆலோசனை கோருமாறு மன்னரிடம் வலியுறுத்தப்படவுள்ளது.
அத்துடன், அடிமை முறையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரித்தானியா இழப்பீடு வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்துமாறு ஜமைக்கா கோருகிறது.
செப்டம்பர் 6 என்பது அடிமை வணிகத்தின் கொடுமைக்குச் சான்றான ‘சோங்’ (Zong) கப்பல் ஆப்பிரிக்காவிலிருந்து ஜமைக்கா நோக்கிப் புறப்பட்ட ஒரு வரலாற்றுத் திகதியாகும்.
அந்த நாளில் மனுவைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீதிக்கான தமது உறுதியை ஜமைக்கா உலகிற்குப் பறைசாற்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் ஆதரவுடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை ஜமைக்கா முன்னெடுத்துள்ளது.
















