தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 22 பேர் ஆபத்தான நிலையில் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை (13) தெரிவித்தனர்.
சுற்றுலா மையமாகத் திகழும் இந்நகரில் அண்மைய காலங்களில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:57 மணிக்கு (0457 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேங்கொக் மாநகராட்சி நிர்வாகத்தின் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறையின் பணிப்பாளர் சூரியசாய் ரவிவான் தெரிவித்தார்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என பேங்கொக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தீ விபத்து மதுக்கூடத்தின் மேடைக்கு அருகில் தொடங்கி வேகமாகப் பரவியதாகவும், இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை முழுவதும் புகை சூழ்ந்துகொண்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், தீ விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் தெரிவித்தார்.
தாய்லாந்தில் இத்தகைய சம்பவம் நிகழ்வது இது முதல் முறையல்ல.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பேங்கொக்கிற்குத் தெற்கே உள்ள ஒரு நகரத்தில் இருந்த மதுக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
2009-ஆம் ஆண்டில், தலைநகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவங்களுக்குப் பின்னர் தீ மற்றும் மின்சாரப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், தாய்லாந்தில் அவை பெரும்பாலும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.














