டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோருக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
டெங்குவைத் தடுக்கும் நடவடிக்கையாக, கைகளையும் கால்களையும் மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்ல மாணவர்களை அனுமதிக்கும் வகையில் கல்வி அமைச்சு அண்மையில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுளம்பு கடியினால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதன் மூலம், பாடசாலை செல்லும் சிறுவர்களிடையே டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறுவர்களை முன்பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களுக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தினார்.
அத்துடன், நுளம்பு கடியிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கச் சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் பெற்றோர்களை ஊக்குவித்தார்.
கல்வி நிலையங்களில் டெங்கு பாதிப்பு அபாயம் தொடர்ந்து கவலைக்குரிய விடயமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று வலியுறுத்தியதுடன், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.












