தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 626,755 அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தொடர்பான விசாரணைகள், வெளிவிவகார அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தபால் சேவைக்காக (United States Postal Service) ஒதுக்கப்பட்ட நிதியானது, இலங்கை தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பு மூலம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டதாக சிஐடி (CID) நேற்று (22) நீதிமன்றத்தில் தெரிவித்தது.
உலகளாவிய தபால் பரிவர்த்தனைகளுக்காக ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்’ (Universal Postal Union) வழங்கிய அதிகாரப்பூர்வ முகவரிக்கு அப்பாற்பட்ட ஒரு மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி இந்தப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய மின்னஞ்சல் தரவுகள், சேவையக அமைப்பு (server system) மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான பொருட்கள் ஆகியவை இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவிடம் (SLCERT) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. (CID) மேலும் தெரிவித்துள்ளது.
இப்பொருட்கள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.














