தென்மேற்கு நகரமான போர்டோவை (Bordeaux) நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதால், பிரான் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திங்கள்கிழமை (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
போர்டோ நகரிலிருந்து சுமார் 15 கி.மீ (9 மைல்) தொலைவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள், வரவிருக்கும் மற்றொரு வெப்ப அலை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்று மேயர் தொமஸ் கசெனேவ் (Thomas Cazenave) தெரிவித்தார்.
சுமார் 8,50,000 மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
கடந்த ஒரு வாரமாக ஐரோப்பா முழுவதும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இவ்விரு நாடுகளிலுமாக 3,30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வெப்பநிலை 40 செல்சியஸ் டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் எச்சரித்துள்ளன.
காட்டுத்தீ பிரான்ஸை மோசமாகப் பாதித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் சுமார் 98,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதியிலிருந்து 2,20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஸ்பெய்னின் கிழக்குக் கடற்கரை நகரமான வலென்சியாவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட புதிய காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 15,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















