சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமட்டா ஆகியோரின் பிரசன்னத்துடன் கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழையக்கூடிய பொது சுகாதார அபாயங்களைக் கண்டறிந்து தடுத்தல், தொற்று நோய்களைக் கண்காணித்தல், சுகாதார அவசரநிலைகளுக்கு உடனடியாகப் பதிலளித்தல் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க எல்லை சுகாதார சேவைகளை மிகவும் திறமையாகச் செயல்படுத்துதல் ஆகியவை இந்த அலுவலகத்தின் முக்கியப் பணிகளாகும்.
சுகாதாரப் பரிசோதனை, நோய் கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகளுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றில் கொழும்பு துறைமுகத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய ஐந்து மாடி அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பால் செயல்படுத்தப்படும் “தென்மேற்கு ஆசியாவில் தொற்று நோய்களுக்குப் பதிலளிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் திட்டம்” என்பதன் கீழ் இந்த புதிய துறைமுக சுகாதார அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இது 168 மில்லியன் இலங்கை ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள முதலீடு என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.













