யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (30.07.2026) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் இடம்பெறவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














