யேமன் கடற்கரைக்கு அப்பால் செவ்வாயன்று (04) தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடியை ஏந்திய வணிகக் கப்பலான ‘MSV ஃபைஸ் நூரே ஒலியா’ (MSV Faize Noore Oliya), செங்கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 14 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தகவல்களின்படி, இந்தியக் கொடியை ஏந்திய இந்தக் கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
யேமன் கடல் பகுதிக்கு அருகே ஒரு ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதால், இயந்திரம் பொருத்தப்பட்ட அந்தப் படகு கவிழ்ந்து மூழ்கியதாக இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைக்கான மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
தற்காப்பு வசதிகள் ஏதுமற்ற அந்தப் படகு மீது நடத்தப்பட்ட இந்தத் தூண்டப்படாத தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய அவர், நமது மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார்.
இந்தியக் கொடியுடன் சென்ற கப்பல் மீதான தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையளிப்பதாக அது தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சர்வதேச நீர்வழிகள் வழியாகத் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் மிக விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சு
வலியுறுத்தியுள்ளது.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், கப்பல் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக ஏமன் நாட்டு அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் வெளியறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
















