அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு கண்காணிப்பதற்காகப் பிரதிப் பொலிஸ் மா அதிபரும் கொண்டுவட்டுவன குளம் அருகிலுள்ள சோதனைச் சாவடிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய வாகனங்கள் மட்டுமே சோதனையிடப்படுவதைக் அவதானித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்இ பாரிய ரக வாகனங்களையும் உடனடியாகச் சோதனையிடுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்காமல் ஆவணங்களை மட்டும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். சட்டமீறல் தொடர்பில் அபாரதப் பத்திரம் வழங்க பொலிஸார் முற்பட்டபோதுஇ சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலையிட்டு பொலிஸாரிடம் தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமல் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்குமாறு அறிவுறுத்திய போதிலும் சாரதி பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குறித்த சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேகநபரின் சீரற்ற நடத்தையை அடுத்து அவர் அம்பாறை பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.
அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.













