2026 ஆம் ஆண்டில் நீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2027 ஜனவரியில் நீர் கட்டணங்கள் குறித்த மீளாய்வு ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்போது தற்போதைய கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது அப்படியே தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் குடிநீர் விநியோகப் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசுகையில் அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு இந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டார்.
இத்திட்டங்களில் புதிய குழாய் பதித்தல், பழுதடைந்த குழாய்களைப் பழுதுபார்த்தல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புதிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மக்களின் கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இவை அனைத்தையும் மீளாய்வு செய்து வருகிறது.
எல் நினோ (El Niño) வானிலை நிலைமையால், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அல்லது சமூகத் திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நீர் மூலங்கள் இதுவரை பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.







