நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, அவர்களின் சொந்த மண்ணிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. டார்வினில் உள்ள மர்ராரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் வெற்றி, உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இதுவொரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தனது 21 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், 39 வயதில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீமும் இந்த வரலாற்று வெற்றியில் பங்கேற்றுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான தோல்வியின் பின்னடைவுக்குப் பிறகு இத்தொடரைத் தொடங்கிய வங்கதேசம், தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக (வெறும் 3 போட்டிகளில்) டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த ஆசிய அணி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இவ்வ வெற்றியின் மூலம், 1995க்குப் பிறகு கடந்த 31 ஆண்டுகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இரண்டாவது ஆசிய அணி என்ற பெருமையை வங்கதேசம் பெற்றுள்ளது. அத்துடன், ‘சேனா’ (SENA) நாடுகளின் நிலப்பரப்பில் 2022-ல் நியூசிலாந்திற்கு எதிராகப் பெற்ற வெற்றிக்குப் பிறகு வங்கதேசம் பதிவு செய்யும் இரண்டாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
வங்கதேச அணியின் இந்த மகத்தான வெற்றியை முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் ஆய்வாளருமான இயன் பிஷப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தனது ‘X’ தளப் பதிவில், சிறப்பாகப் பந்துவீசிய மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன், ஹசன் மஹ்மூத் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் உள்ளிட்ட முழு அணிக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.








