அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்குப் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாகத் தேசபக்தி தேசிய இயக்கம் (PNM) குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவ்வியக்கத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான சஞ்சீவ வீரவிக்ரம இந்த விபரங்களை வெளியிட்டார்.
பிரான்ஸில் வைத்து அஸாத் மௌலானாவிடம் ஷானி அபேசேகர வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பிய அவர், அது பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்படாமல், பிரெஞ்சுத் தூதரின் இல்லத்தில் வைத்து சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலைத் தன்னிச்சையாக நீடிப்பதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பாகப் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிலும் தவறான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.













