பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில்,
இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்கள் (Police Clearance Certificates), பத்தரமுல்லை, சுகுறுபாய கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவினால் வழங்கப்படுகின்றன.
குறித்த நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவுக் கட்டமைப்பொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த தரவுக் கட்டமைப்பு 2026.08.20 அன்று நண்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்ததுடன், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) அறிவிக்கப்பட்டு, தற்போது குறித்த தரவுக் கட்டமைப்பை மீளச் செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் வழமை போன்று சமர்ப்பிக்க முடியும்.
2026.08.20 அன்று பொலிஸ் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாக, அதற்கு முன்னர் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தரவுக் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
எனவே, 2026.08.20 அன்று விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழி ஊடாக பொலிஸ் நற்சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மீண்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் தொடர்பான அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பொலிஸ் நற்சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்காக அறவிடப்பட்ட ரூ. 5,100/- கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்திய ATM அட்டை மூலம் தொடர்புடைய கணக்கில் மீள வரவு வைக்கப்படும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம் – என்றும் கூறப்பட்டுள்ளது.













