இலங்கையின் பிரதான பாதாள உலகக் குற்றக் குழுவின் முக்கிய சூத்திரதாரியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கமகே சரங்க பிரதீப் என்ற ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்பவரைக் கைது செய்வதற்காகத் துபாய் சென்றிருந்த, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச தலைமையிலான இலங்கைப் புலனாய்வுக் குழுவினர், ‘வெல்லே சரங்க’ குறித்த துல்லியமான தகவல்களைச் சேகரித்துத் துபாய் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் துபாய் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, துபாயிலுள்ள அவரது இல்லத்திலேயே வைத்து அவர் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கொக்கைன் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ‘வெல்லே சரங்க’ மீது போதைப்பொருள் கடத்தல், கொலைகள் மற்றும் கடத்தல்கள் உட்படப் பல தீவிர குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மொடார, லெல்லாம பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தை எதிர்த்த பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றமை, 2018 இல் மட்டக்குலிய பகுதியில் 15 வயது சிறுவனைக் கடத்தியமை மற்றும் வீடுகளுக்குச் சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முன்னதாக 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், 2020 இல் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குத் தப்பியோட முயன்றபோது நாட்டின் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டிருந்தார்.
பின்னர் தப்பிச் சென்று துபாயில் தலைமறைவாக இருந்த நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இக்கைது குறித்து இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













