வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சிகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் சந்தை வாய்ப்புகளையும் முதலீட்டு தொடர்புகளையும் உருவாக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ள ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ஐ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் பார்வையிட்டு, கண்காட்சியில் பங்கேற்ற தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார்.
வடக்கு கைத்தொழில் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றைய தினம் நிறைவடைகிறது.
இக்கண்காட்சியில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் தமது உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
கண்காட்சி நிலையங்களைப் பார்வையிட்ட ஆளுநர், பங்கேற்றுள்ள தொழில்முனைவோரிடம் அவர்களின் உற்பத்திகள், தொழில் முயற்சிகளின் தற்போதைய நிலை, சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்தார். மேலும், உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல், புதிய சந்தைகளை அடைதல் மற்றும் தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.













