கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ‘குஷ்’ ரகப் போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் நேற்று விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் மாத்தறை வெலிகமை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் மாலை 04.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையின் UL-405 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சுமார் 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 668 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் 3 உருண்டைகளாக தயாரிக்கப்பட்டு அவர் அணிந்திருந்த காற்சட்டையின் இரு பக்கப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட குஷ்’ போதைப்பொருள் தொகுதியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.












