நேற்று சாவகச்சேரியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் அனுர அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக,உண்ணாவிரதம் இருந்த அதே காலப்பகுதியில், சாவகச்சேரி மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ஜுனா,அனுராதபுரத்தில், ராஜபக்சக்களின் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார்.
இந்த உண்ணாவிரதத்துக்கு அடுத்த நாள் அதாவது இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணியை ஒழுங்குப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகள் தொடர்பிலும் அனைத்துலக கவனத்தை ஈர்ப்பதும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையைக் கேட்பதும் இந்தப் பேரணியின் பிரதான நோக்கங்கள் ஆகும்.
ஐநாவின் 63ஆவது கூட்டத் தொடர் கடந்த ஏழாம் திகதி தொடங்கி நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் இந்தப் பேரணி இடம்பெறவிருக்கிறது. கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா அலுவலகத்தில் இருந்து தொடங்கி,யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவரை செல்லும் இந்த பேரணியானது அங்கே ஒரு பெரும் கூட்டத்துடன் முடிவடையும்.
இந்த இரண்டு காட்சிகளும் ஐநாவின் 63ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலில் இடம்பெற்றுள்ளன. கடந்த வாரம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதும் இதே காலச் சூழலில்தான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மூன்றாம் திகதி மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை வெளியிடப்பட்டது.ஏழாம் திகதி மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்தப் பின்னணியில் நான்காம் திகதி நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் மக்கள் சந்திப்புகளை ஒழுங்குப்படுத்தி வருகின்றன.அவ்வாறு நாமல் ஒழுங்குபடுத்திய ஒரு மக்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.அந்தச் சந்திப்பு நடப்பதற்கு முன்னரே நாமல் கைது செய்யப்பட்டு விட்டார். அதனால் அந்தக் கூட்டத்துக்குரிய ஏற்பாடுகளை அவருடைய தகப்பன் மகிந்த முன்னெடுத்தார். மஹிந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.ஆனால் மௌனமாக இருந்தார். எதையும் பேசவில்லை.அந்தக் கூட்டம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்பதனைத்தான் அனுராதபுரத்தில் திரண்ட மக்கள் கூட்டம் காட்டுகிறது.
அதேசமயம் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளைப் போன்று மக்கள் சந்திப்புகளை ஒழுங்குப்படுத்தி வருகிறது. நேற்று அவ்வாறு பொலநறுவையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. ஆனால் ராஜபக்சகளின் கூட்டம் பிரம்மாண்டமானது என்பதனை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அப்படியென்றால் நாமலின் கைது அவருடைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தோடு கூடிய எழுச்சியை ஊக்குவித்திருக்கிறதா?
நாமல் கைது செய்யப்பட்டமை ஊழலுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் அரசாங்கம் முன்னேறி வருவதைக் காட்டும் ஆகப்பிந்திய உதாரணம் எனலாம். ஊழல் மோசடி போன்றவற்றுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்துலக மட்டத்திலும் கவனத்தை ஈர்த்திருப்பது தெரிகிறது.
இந்த மாதம் முதலாம் திகதி வெளிவந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன் பின் மூன்றாம் திகதி வெளிவந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையிலும் அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.”ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான சில வழக்குகள் உள்ளிட்ட, அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டுள்ளன.இருப்பினும்,உண்மை,நீதி, நல்லிணக்கம் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தம் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாடுகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் தேவை என்று”….அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின் ஏழாம் திகதி தொடங்கிய 63ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பேசிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் “ஊழலுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது “என்று கூறியுள்ளார்.
அதாவது ஊழலுக்கு எதிராக அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் கைது நடவடிக்கைகள்,விசாரணை நடவடிக்கைகள் போன்றன அனைத்துலகக் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.அது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி விசாரணைக் கட்டமைப்பின் நம்பகத் தன்மையை உலக அளவில் பலப்படுத்த உதவுகிறது. இந்தக் கைதுத் தொடரில் ஆகப்பிந்திய நடவடிக்கையாக நாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே ஒரு முன்னாள் ஜனாதிபதி ஆகிய ரணில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.இப்பொழுது வருங்கால ஜனாதிபதி வேட்பாளராகக் கருதப்படும் நாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ள உதவும். ராஜபக்சக்களை தற்காப்பு நிலைக்குத் தள்ள உதவும்.எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இடையே ஒற்றுமைப்பட முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. சஜித் பிரேமதாச தகப்பனைப் போல தலைமைத்துவப் பண்பு உடையவர் அல்ல. தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு முன்னால் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் சக்தி உடையவராக சஜித் காணப்படவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சஜித் தலைமை தாங்க முடியாத ஒரு வெற்றிடத்தில், ஒரு பகுதி எதிர்க்கட்சிகள் நாமலை எதிர்பார்ப்போடு பார்ப்பது தெரிகிறது. ஆனாலும் எல்லா எதிர்க்கட்சிகளாலும் சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைமையாக நாமல் இன்றுவரை வளரவில்லை. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள்ள ஒரு முக்கியமான சாதகமான அம்சம்.
இப்படியாக எதிர்க்கட்சிகள் மத்தியில் பலமான தலைமை அல்லது ஐக்கியம் இல்லாத ஒரு பின்னணிக்குள், ஒப்பீட்டளவில் தலைமைத்துவப் பண்பு மிக்கவர் என்று கருதப்படும் நாமலை உள்ளே போட்டதன்மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் தங்களை ஒருங்கிணைப்பதற்குத் தேவையான அவகாசத்தை வழங்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
இது தென்னிலங்கை அரசியல்.ஆனால் தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும்போது நாமலின் கைது வேறு ஒரு விளைவை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐநா போன்றன அரசாங்கம் ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஒரு பின்னணியில், ஐநாவின் 63ஆவது கூட்டத்தொடர் நடக்கவிருந்த ஒரு பின்னணியில், நாமலைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம் ஐநாவின் கவனக்குவிப்பு மையத்தை இடம்மாற்ற விளைகிறதா? பொறுப்புக் கூறலில் இருந்து ஐநாவின் கவனக் குவிப்பு மையம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் மீது திசை மாற்றப்படுகிறதா?
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை,ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை போன்றன அரசாங்கம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேறி வருவதைச் சுட்டிக்காட்டும் அதேசமயம், பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் காணலாம். பொறுப்புக் கூற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து ஐநாவின் கவனக்குவிப்பு மையத்தை ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது குவிமையப்படுத்தும் நோக்கம் நாமலின் கைதுக்கு பின்னால் உண்டா?
நாமலை கனகாலம் சிறையில் வைத்திருந்தால் அவர் நீண்ட எதிர்காலத்தில் பலமடையக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. எதிர்க்கட்சிகளுக்கு உறுதியான ஒரு தலைவர் கிடைக்கக்கூடாது என்று சிந்தித்தால் நாமலை தற்காப்பு நிலையில் வெளியிலேயே வைத்திருப்பதுதான் புத்திசாலித்தனமானது.அவரைத் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதனால் சிலசமயம் அவர் தியாகியாகி விடக்கூடும். என்பதைத்தான் அனுராதபுரக் கூட்டம் உணர்த்துகின்றதா?













